Wednesday, June 1, 2011

இரவு நிலவு நீ


என்னை நானே வெறுக்கத்தொடங்கும் இந்த இரவில்
என் தனிமையை வெறுமையாக்குகிறது இந்த நிலவின் நிழல்..

நீ கைவிட்டுப்போன என் ஒட்டுமொத்த அன்பையும் எனக்குள்ளே புதைத்தபடி
இந்த நிலவிடம் புலம்புகிறேன்.
அதனால்தான் அது தினம் தினம் தேய்கிறது..

நீ என்னை புன்னகைக்க வைத்தாய் ,வெட்கப்பட வைத்தாய்
காதலிக்க வைத்தாய், கனவு காண வைத்தாய்
கடைசியில் தனிமைச்சிலுவையில் என்னை கண்ணீரோடு புலம்ப வைத்தாய்

என் சுவாசக்காற்றில் நிரம்பிவழியும்
ரணங்கள் பற்றியும்
என் உயிர்ப்பரப்பில் குடியிருக்கும்
துயர வலிகள் பற்றியும்
காற்றோடு பேசிக்கொள்கிறேன்..
அதுகூட உன்னைப்போலவே கேட்டும் கேட்காமலும்
என்னை விட்டு விலகிச்செல்கிறது

கண்ணீரும் வேதனையும் கண்களுக்கு பொதுவானது..
உறவென்பதும் பிரிவென்பதும் பெண்களுக்கு பொதுவானது

உடைந்து போன ஞாபகங்கள் கீறிக்கிழிக்கும் மனசை
எப்படி நான் புதுப்பிப்பது?

-நிந்தவூர் ஷிப்லி-